இயக்குநர்களுக்காக மாறிய சினிமா
இயக்குநர்களுக்காக மாறிய சினிமா
முன்னுரை:
வேறெந்த கலைக்கும் இல்லாத ஒரு மாபெரும் பெருமை சினிமாவிற்கு இருக்கிறது. சாதி பாகுபாடு இன்றி எல்லா சாதி மக்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்த கர்வமிகு பெருமை அது. எல்லோரையும் ஒன்றாக கூட செய்ததால் சினிமா ஒரு புரட்சிகரமான கலையாகவே இங்கு இருக்கிறது. சினிமா என்றாலே மென்(men)ஹீரோயிசம் தான் என்ற நிலைமை மாறி தற்போதைய சூழலில் இயக்குநர்களுக்கென்று தனி ரசிகர் படை உருவாகி கொண்டு இருக்கிறது. இதனைப் பற்றிய ஆய்வார்ந்த தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.
ஹீரோ வழிபாடு( Hero workship)
உலக சினிமா முதல் தமிழ் சினிமா வரை மக்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களால் ஈர்க்கப்பட்டு உளவியல் ரீதியாக பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நாம் அறிந்தவை.உதாரணமாக சக்திமானின் ஹீரோயிசத்தால் ஈர்க்கப்பட்டு சிறுவன் மாடியில் இருந்து சக்திமான் காப்பாற்றுவார் எனக் கூறி கீழே விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டது நாம் அனைவரும் அறிந்தவை. தமிழ் சினிமா எடுத்துக் கொண்டால் அந்த காலம் ரசிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி,கமல் என ஆரம்பித்து தற்போது விஜய் ,அஜித் வரை அவர்களின் ரசிகர்கள் கண்மூடித்தனமாக தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு கட்டவுட் வைத்து பூஜை செய்து தங்களின் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். சில நேரங்களில் இருதரப்பினரும் சண்டை போட்டு உயிர் பலி ஏற்படுவதும் உண்டு .தங்களின் ஹீரோ திரையில் பார்த்தால் போதும் என்று முதல் நாள் முதல் காட்சி அதிக விலை கொடுத்து டிக்கெட்களை வாங்குவார்கள்.இவை எல்லாம் தான் ஹீரோ ஒர்ஷிப்( hero worship) ஆகும்.ஹீரோக்காக படம் பார்ப்பவர்கள்.
இயக்குநர்காக மாறிய சினிமா
தற்போதைய சினிமாவில் ஹீரோ ஒர்க்ஷிப்( hero worship) படிப்படியாகவே குறைந்து வருகிறது .சினிமாவில் இயக்குநர்களுக்கென தனி ரசிகர் படை அதிகரித்துள்ளது. சினிமா பயிலும் மாணவர்கள் இயக்குநர் காட்சிப்படுத்தும் ஒவ்வொரு பிரேமும் (frame) ஆய்வு செய்கின்றனர். சினிமா பயிலும் மாணவர்கள் மட்டும் இன்றி general audience, film critic ஆகியோரும் இயக்குநர்களின் படைப்பாற்றலை மற்றும் இயக்குநர்களின் ரகசிய குறியீடு முதலியவற்றை டி-கோர்ட்( decode) செய்து புரிந்து கொள்ள மிக ஆர்வம் காட்டுகின்றன.
சில இயக்குநர்கள் தங்கள் படங்களின் உரையாடல் மொழியை தவிர்த்து காட்சி மொழியாகவே எடுக்கப்படுகின்றன. திரையில் வசனம் பேசாமல் வெறும் காட்சி மொழியை கொண்டே மக்களிடம் படத்தின் கருவை சென்றடைய செய்வர். இப்பெரும் படப்பை கொடுக்கும் சர்வவல்லமை வாய்ந்தவர் கிம்-கி-டுக்.
உலக சினிமாவில் இயக்குநர் கிம்-கி-டுக், ஸ்டான்லி குப்ரிக், கிறிஸ்டோபர் நோலன், தமிழ் சினிமாவில் இயக்குநர் ப.ரஞ்சித், தியாகராஜ குமாரராஜா,மாரிசெல்வராஜ், மிஸ்கின் என இயக்குநர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.காரணம் அவர்கள் வைக்கும் பிரேம்கள் மற்றும் கதையின் கருத்தியல் தான்.
ஆட்யூர் கோட்பாடு
ஆட்யூர் என்ற பிரஞ்சு வார்த்தை ஆங்கிலத்தில் "ஆசிரியர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயக்குநர் தான் இயக்கும் சினிமாவில் அனைத்து அம்சங்களிலும் தங்களின் கட்டுப்பாட்டை செலுத்தவர். திரைப்படத்திற்கு ஒரு தனித்துவமான பாணியைக் கொண்டுள்ளனர் மற்றும் பெரும்பாலும் இயக்குவதை தவிர மற்ற பாத்திரங்களில் நிரப்புகிறார்கள்: எழுதுதல்,எடிட்டிங் செய்தல், மற்றும் சில சமயங்களில் அவர்களே தங்களின் சொந்த படங்களில் நடிப்பது.இவ்வாறு சினிமா எடுப்பதுதான் ஆட்யூர் என்கிறார்கள்.உலக சினிமாவில் கிம்-கி-டுக், ஸ்டான்லி குப்ரிக், கிறிஸ்டோபர் நோலன் மற்றும் தமிழ் சினிமாவில் தியாகராஜ குமாரராஜா ஆட்யூர் இயக்குநர்கள் என கூறலாம்.
கிம்-கி-டுக் கின் சினிமா (1960-2020)
தென் கொரியாவை சேர்ந்த கிம்-கி-டுக், சினிமா அல்லது கலை குறித்த கல்விப் பின்புறம் கொண்டவரல்ல.படிப்பை பாதியில் விட்டுவிட்டு தொழிற்சாலைகளில், ராணுவத்தில் ஊழியராக பணிபுரிந்தவர்.
கிம்-கி-டுக் கின் படங்களை வழக்கமாக நாம் அறிந்த வெகுசன சினிமா, இணை சினிமா அல்லது கலை சினிமா என்பதாக சொல்ல முடியாது. அவை சினிமாக்கலை என்ற பிரத்தியோக கலைத் தன்மையை கொண்டவை.அவரது படங்கள் தத்துவம் அறிதல் என்பதாக இந்த உலகு பற்றிய ஒரு புலன் உணர்தல்.
இவர் 1996 முதல் 2014 வரை 20 திரைப்படம் இயக்கியுள்ளார். இன்றைய சினிமாவில் கிம்மின் வகைமை தனித்துவமானது. மனித உடலின் உள்ளுறைந்த பாலியல் ஆற்றல் பற்றிய உணர்வுகளை அதன் எல்லைக்கு கொண்டு சென்று பிம்பப்படுத்திய மனித உடலின் உயிர்- அரசியல் சார்ந்த சினிமாக்கள்.
ஆசியாவின் தத்துவமிக்க உடல் பற்றியும் அதன் உள்ளார்ந்து உள்ள பின்காலனிய உடற் கட்டமைப்புகளின் மேற்பரப்பை சிதைத்து உட்செறிந்த உடலரசியலை வெளிப்படுத்துபவை கிம்-மின் சினிமாக்கள்.
(எ.கா): ஸ்பிரிங் சம்மர் பால் வின்டர் அண்ட் ஸ்பிரிங்
இயற்கையில் சூழ்ந்த ஜிஸான் நீர்நிலையில் அமைந்துள்ள ஆலயத்தில் வாழும் பௌத்த துறவி வழியாக நம் வாழ்வின் மகிழ்வு,கோபம், துயரம் மற்றும் இன்பம் ஆகியவற்றை விவரிக்கும் இயற்கை எழிலின் ஒரு ஓவியமாக கேமராவால் வரையப்பட்ட சினிமா இது.
பௌத்தம் செல்லும் பிறவிச் சுழற்சி என்பதை தனது வழக்கமான காமம், குரோதம் இரண்டைக் கொண்டு விவரிக்கிறது. இப்படம் நிறைய தத்துவங்களை பேசியுள்ளது.அதில் மிக நுட்பமானவை "காமத்தில் விழிப்புக் கொள்ளும் வேட்கையானது உடமை கொள்ளச் செல்லும் உடமை உணர்வு கொலையுணர்வை தூண்டும்" என்பதாகும். இன்பத்தை அடைவதற்கான உடைமை மனோபாவம் ஆதிக்கமாக அதிகாரமாக உட்செறிக்கப்பட்டுள்ளது. இவரது படங்களை கண்டு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகினர்.
ஸ்டான்லி குப்ரிக் (1928-1999)
உலக சினிமா இயக்குநர்களின் தவிர்க்க முடியாத ஒருவர் ஸ்டான்லி குப்ரிக்.மிக தனித்துவமான படங்களை இயக்குவதில் சிறப்பு பெற்றவர். இவர் ஆட்யூர் தியரி இல் கூறப்படுவது போலவே இவர் படத்தில் எழுத்து,இயக்கம்,எடிட், சில சமயங்களில் இசை அனைத்தும் இவரை இயற்றுவார். சினிமாவில் ஆட்யூர் என்று கூறினால் அவர் ஸ்டான்லி குப்ரிக் தான் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். இவரது படம் மனிதன் தனக்குள் வைத்துள்ள தர்க்கத்தை உடைத்து மிக இயல்பான வகையில் உளவியல் சிந்தனை அடிப்படையில் காட்சிப்படுத்தும். இவரது படம் காட்சி மொழியாக மக்களுக்கு கருவை சென்றடையும்படி இயக்குவார். இவர் சினிமா பெரும்பாலும் Decode செய்வதன் மூலமாகவே புரியும்.
(எ.கா): இவரது கடைசி படமான "Eyes wide shut" 1999 இல் வெளிவந்தது. இப்படத்தில் கணவன் மனைவிக்கான உறவை பற்றி மிக உளவியல் சிந்தனை அடிப்படையில் இயற்றப்பட்டது.நிறைய தத்துவங்கள், ரகசிய குறியீடுகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும் வெவ்வேறு விதமான பாலியல் உணர்ச்சியை வெளிப்படுத்தி அவை எல்லாம் இயல்பான உணர்ச்சிகள் என்று இறுதியில் இருவரும் பேசி இப்பிரச்சினையை சரி செய்வது போல காட்சிப்படுத்தி நிறைவு செய்து இருப்பார்.
இப்படம் சாதாரண மக்களால் ஏற்கப்படவில்லை. நிறைய கண்டனங்கள் வந்து குவிந்தன. நிறைய பல்வேறு விதமான விமர்சனங்களும் எழுந்தன. இந்த இயக்குநர்கென ரசிகர்கள் உலகெங்கும் உள்ளார்கள்.
பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்தின் எழுச்சி தமிழ் சினிமாவில் ஏற்பட்ட பெரும் புரட்சி என கூறலாம். ஏனெனில் தமிழ் சினிமா அதுவரை பிம்பப்படுத்திய தலித் மக்களை புதிய வகையில் பிம்பப் படுத்தினார். தமிழ் சினிமாவில் தலித் அரசியல் பேசும் படங்கள் ரஞ்சித்துக்கு முன் ரஞ்சித்துக்குப் பின் எனப் பிரிக்கலாம்.அதுவரை தமிழ் சினிமா தலித்துகளை திருடன், நகைச்சுவை, விபச்சாரி பெண் போன்ற வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அனைத்து வகையான ஸ்டீரியோடைப் (stereotype)- பையும் சுக்கு நூறாக இயக்குநர் பா.ரஞ்சித் உடைத்தார்.
(எ.கா) மெட்ராஸ் படம் இறுதியில் அம்பேத்கரிய அரசியலை நம்பிக்கை முனையாக வைத்து முடிகிறது. அம்பேத்கர் தமிழக அரசியலுக்கு மட்டும் உரிய பிம்பம் அல்லர்.இன்னும் அவரது அரசியல் இந்திய எல்லைக்கு மட்டும் உரியதும் அன்று. நெல்சன் மண்டேலா, மால்கம் எக்ஸ் போல உலக மட்டத்தில் வைத்து பேசத்தக்கவை. அவரது சிந்தனையும் அரசியலும் சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா விரும்புவர் , விடுதலை சிந்தனையுடையவர், முற்போக்கு பேசுபவர்கள்,சாதாரண மக்கள் அனைவரையும் ரஞ்சித் தன் கருத்தியல் கொண்ட படங்களினால் ஈர்த்தார்.
தியாகராஜன் குமாரராஜா
தமிழ் சினிமாவின் ஆட்யூர் இயக்குநர் எனக் கூறலாம். இவர் ஆரண்ய காண்டம் சூப்பர் டீலக்ஸ் என்று இரு படங்கள் இயக்கியுள்ளார்.இவரின் முதல் படமே 59வது தேசிய திரைப்பட விருதுகளில் ஒரு இயக்குநரின் சிறந்த அறிமுக படத்திற்கான இந்திரா காந்தி விருதை பெற்றது. இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர். இவரின் படம் பல கேள்விகளை எழுப்பும் வாழ்வின் புரிதல், வாழ்வின் நோக்கம் அடிப்படையில் இயக்குவார்.
(எ.கா) சூப்பர் டீலக்ஸ் மிகச் சிறந்த ஆட்யூர் சினிமா என்று கூறலாம். இந்த படத்தில் இருக்கும் ஒரு ஒரு பிரேம்மும் ஓவியம் போல இருக்கும். Decode செய்தால் மட்டுமே இப்படத்தின் மற்றொரு கருவை புரிந்து கொள்ள முடியும். ஸ்டான்லி குப்ரிக் இயற்றிய "Eyes wide shut" படம் போலவே இந்த படத்திலும் இறுதியில் கணவன் மனைவி பேசிக்கொண்டே இணைவார்கள்.
தமிழ் சினிமா
லோகேஷ் கனகராஜ் மல்டி யுனிவர்ஸ் கான்செப்ட் வைத்து படங்களை இயக்குவதால் பார்வையாளர்களுக்கு புதுமை வகை சினிமா பாணியில் தோன்றுகிறது.இதனால் சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்கள் ஏதேனும் அப்டேட் வந்தாலும் அவர்கள் எல் சி யூ என அவர்களே தனி ஒரு கதை தயாரித்து பதிவு செய்கிறார்கள். இயக்குநர் ராம் கற்றது தமிழில் உலகமயமாதல் பற்றி பதிவு செய்திருப்பார் மற்றும் அவரின் பேரன்பு படத்தில் 4 சிசன்ஸ் இன்ஸ்பிரேஷன் பேரன்பு படத்தில் இருக்கும். இயக்குநர் ராமின் சினிமா அறிவு,உலக அரசியல், கருத்தியல் போன்றவற்றிற்காக அவருக்கு பெரும் அளவு ரசிகர்கள் உண்டு. மாரி செல்வராஜ் எனும் படைப்பாளி ராமின் மாணவன். மாரி செல்வராஜ் மாரி செல்வராஜின் படைப்புகள் இயற்கையிடம் ஒன்றி மிக நெருக்கமாக இருக்கும். இவரின் அரசியல் கருத்தியல் சமூகத்தை நோக்கி அவரின் பார்வையால் பல சினிமா ரசிகர்களிடம் இருந்து பாராட்டப்பட்டிருக்கிறார்.
முடிவுரை
இயக்குநர்களுக்கு என ரசிகர்கள் அதிகரித்து வருவது மிகவும் வரவேற்கக் கூடியதாக இருக்கின்றன. சினிமா என்பது மிகச் சிறந்த கலை. மக்களின் பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லாமல் படிப்பறிவு இல்லாத பல மக்களும் திரைப்படம் பார்த்து தங்களின் அறிவு திறனை வளர்க்க மிகச்சிறந்த இடமாகவே சினிமா இருக்கின்றது. இயக்குநர் பாணியில் சினிமா பார்க்கையில் பல தகவல்கள் சென்றடைகின்றன.
- ஜெ.அருண்
Reference and credits: சாதி அடையாள சினிமா ; கிம்-கி-டுக் கின் சினிமாட்டிக் உடல்கள்
Comments
Post a Comment